Sunday, January 6, 2013

கல்லெறியும் யோக்கியர்கள் :

 



டெல்லி குற்றவாளிகள்






ந்தியாவை சில நாட்கள் கட்டிவைத்திருந்த ஒரு செய்தி கசப்பான முடிவுக்கு வந்திருக்கிறது. பாலியல் சாயம் பூசப்பட்ட செய்திகள் எப்போதும் சிறப்பான விற்பனையை கொண்டிருக்கின்றன. இம்முறை அது இன்னும் மெருகேற்றப்பட்டு விழிப்புணர்வு, பாதுகாப்பு, மனிதாபிமானம் என பல முகமூடிகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. போராடுபவர்கள் எல்லோரையும் நக்சலைட் என்றும் அன்னிய கைக்கூலிகள் என்றும் பேசிய வாய்கள் எல்லாம் இந்த விவகாரத்தில், உணர்வுகளை மதிப்பதாவும் வன்முறையின்றி போராடும்படியும் கோரிக்கை வைக்கின்றன.
இந்த நிகழ்வு எப்படி மைய அரசால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதும் மக்களின் பொதுஉணர்வானது எப்படி பெரிய ஊடகங்களால் தீர்மானிக்கப்படுகிறது என்பதும் முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய விடயமென்றாலும் இம்முறை நான் அதுகுறித்து எழுத விரும்பவில்லை.


மக்களின் பரவாலான நம்பிக்கையின்படி இது பாலியல் வன்கொடுமைக்கெதிரான இளைஞர்களின் சீற்றம் எனும் கருத்தின் அடிப்படையிலேயே இந்த பதிவை தொடர்கிறேன்.
பொதுவில் இந்த போராட்டத்தை நடத்துவோரும் ஆதரிப்போரும் வைக்கும் கருத்துக்கள் என்னென்ன? பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு தூக்குதண்டனை வழங்கு, அதனை சிறப்பு நீதிமன்றம் வைத்து விசாரணை செய், பெண்கள் பாதுகாப்புக்கு சிறப்பு சட்டம் இயற்று.. இவைதான் பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான நடவடிக்கை என பரவலாக சொல்லப்படுகின்றன. சில, பாலா(சேது) ரசிகர்களோ குற்றவாளிகளுக்கு ஆணுறுப்பை வெட்டிவிடும் தீர்வை முன்வைக்கிறார்கள். சரி, கடுமையான சட்டங்களால் பாலியல் குற்றங்களை தடுத்துவிட முடியுமா?


குற்றங்கள் இங்கு பெரும்பாலும் மூன்று காரணங்களால் நடக்கின்றன. ஒன்று, சட்டத்தை எப்படியும் வளைத்துவிடமுடியும் எனும் நம்பிக்கையில் நடப்பவை. பெரும்பாலான பெரிய குற்றங்களும் பெரிய மனிதர்களின் குற்றங்களும் இந்த வகையிலானவை.
இரண்டு, தண்டனையை அறிந்து அதற்கு தயாராக இருந்து செய்யப்படும் குற்றங்கள். வழிப்பறி போன்ற குற்றங்கள் இந்த பட்டியலில் வரும்.
மூன்று, தண்டனை பற்றிய அறிவின்றி உணர்ச்சிவயப்பட்டு செய்யப்படும் குற்றங்கள். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் மாணவர்கள் இதற்கான சிறந்த உதாரணமாக வைக்கலாம்.


ஆக, ஒரு குற்றத்துக்கான காரணியாக மூன்றில் எது இருந்தாலும் குற்றவாளி தண்டனை பற்றி கவலைகொள்ளப்போவதில்லை அல்லது அது அவனுக்கு நினைவுக்கு வரப்போவதில்லை. தண்டனை பற்றி பயம் இருப்பவனுக்கு சிறைக்கு போவதென்பதே கடுந்தண்டனைதான். ஆக பயந்தகொண்டு குற்றம் செய்யாமல் இருப்பவன் இப்போதிருக்கும் சட்டத்துக்கே பயந்தவனாகத்தான் இருப்பான். பிறகு கடுந்தண்டனை வாயிலாக எப்படி குற்றத்தைத் தடுப்பீர்கள்?


பாலியல் குற்றங்களுக்கான நடவடிக்கையை எடுக்க வேண்டியது காவல்துறை. அதற்கான தண்டனையை வழங்கவேண்டியது நீதித்துறை. இந்தியாவில் அதிகம் பாலியல் அத்துமீறல் செய்யும் துறை எது என்று பார்த்தால் அதில் காவல்துறையும் ராணுவமும்தான் முதலில் வரும். மனைவியை கணவன் அடிப்பது தவறில்லை என்றும் தலித் பெண்ணை உயர்சாதிக்கார்கள் கற்பழித்திருக்க மாட்டார்கள் என்றும் தீர்ப்புக்கள் எழுதிய நீதிமான்கள் இருக்கும் நாடு இது. இந்த நடைமுறையை வைத்துக்கொண்டு கடுமையான தண்டனையை யாருக்கு வாங்கிக்கொடுக்க முடியும்? ஆக, அதிகாரமும் பணமும் இல்லாதவன் மட்டும் தண்டிக்கப்பட்டால் போதும் என்பதுதான் உங்கள் நிஜமான கோரிக்கையா?


இந்த கருத்துக்களை பகிர்ந்துகொண்ட பெரும்பாலான நபர்களிடம் இருந்து எனக்கு வந்த பதில் கேள்வி  “அப்ப என்னதான் செய்யலாம் என்கிறீர்கள்? குற்றவாளிகளை அப்படியே போகவிடுவதா?.”


இப்போது பிரச்சினை பலாத்கார குற்றவாளிகளை எப்படி தண்டிப்பது என்பதல்ல. நியாயமான காவல் மற்றும் நீதித்துறை இருக்கும்பட்சத்தில் இப்போதையை சட்டங்கள் வாயிலாகவே அவர்களை தண்டிக்க முடியும். ஆனால் இவ்வகை குற்றங்களை எப்படி கட்டுப்படுத்துவது?


இன்றைக்கு பெருகிவரும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு அடிப்படை நம் நாட்டில் இருக்கும் பெண்கள் பற்றிய கண்ணோட்டத்தில் இருக்கிறது. இரவு பத்து மணிக்கு நண்பனுடன் சாலையில் நிற்கும் பெண்ணைப் பற்றிய சமூகத்தின் கருத்தென்ன? அது அவளது உரிமை என சொல்லும் ஆண்கள் நூறில் பத்தாவது இருப்பார்களா? தொன்னூறு விழுக்காடு ஆண்கள் பெண் ஒருத்தி இரவில் ஆணுடன் தனியே வருவது தவறென கருதும் நாட்டில் பத்து விழுக்காடு ஆட்களேனும் அந்த தவறை செய்பவர்களை தண்டிக்க வேண்டும் என கருத்தினை கொண்டிருப்பார்கள். அதில் குறிப்பிட்ட சதவிகித மனிதர்கள் தாங்களே அந்த தண்டனையை வழங்க வேண்டுமென நினைப்பார்கள். அதிலொருவன் வன்புணர்ச்சியில் இறங்குகிறான். செயல் ஒரு மிகச்சிறிய சதவிகிதத்தினருடையதாக இருக்கலாம், ஆனால் அதற்கான நியாயம் பெரும்பாலானவர்களிடமிருந்துதான் கிடைக்கிறது.


இந்தியன் ஏர்லைன்ஸ் நஷ்டத்தில் இயங்குவதற்கான காரணங்களில் ஒன்றாக வசீகரமற்ற பணிப்பெண்களையும் குறிப்பிட்டது டைம்ஸ் ஆஃப் இந்தியா. இந்த செய்தி வந்த பிறகு, ஒன்று அந்த பத்திரிக்கை கண்டனத்துக்கு உள்ளாகியிருக்க வேண்டும். அல்லது விமானத்தில் சாப்பாடு கொடுக்கக் கூட அழகான இளமையான பெண் வேண்டுமென விரும்பும் இந்திய பயணிகளின் பொது புத்தி விமர்சனத்துக்குள்ளாகியிருக்க வேண்டும். ஆனால் அந்த செய்தி மிக சாதாரணமாக நம்மை கடந்து சென்றது. செக்சியாக இருக்கிறாய் என் சொன்னால் அதை பாராட்டாக எடுத்துக்கொள்ள சொல்கிறார் இந்திய மகளிர் ஆணைய தலைவி. பெண்கள் மீதான எல்லா வன்முறைகளையும் பெண்களது ஆடையும் நடவடிக்கையுமே தூண்டுவதாக ஆகப்பெரும்பாலான இந்திய ஆண்கள் நம்புகிறார்கள். இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கிற மதங்களும் அரசு எந்திரமும் பெண்ணுரிமைக்கு எதிரானதாக இருக்கிறது. செய்தி சொல்லவும் பொழுதுபோக்கவும் இருக்கிற ஊடகங்களும் சினிமாவும் அவ்வாறே. ஒருவரியில் சொல்வதானால் இந்தியாவின் ஆன்மாவே பெண்களது பாதுகாப்புக்கு எதிரானதுதான்.






புதிய சட்டங்கள் இயற்றலாம், ஆனால் அந்த சட்டத்தை மேற்சொன்ன ஆன்மாவைகொண்ட போலீஸ்தான் நடைமுறைப்படுத்தியாகவேண்டும். நாகை மாவட்டம் தலைஞாயிறு கிராமத்தில் சமீபத்தில் 11 வயது தலித் சிறுமி பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்ட வழக்கு வழக்கமான பிரிவுகளின்கீழ் பதியப்பட்டிருக்கிறது. சிறார்கள் மீதான பாலியல் வன்முறைக்கெதிரான தமிழகத்தில் இருக்கும் சிறப்பு சட்டத்தின்கீழ் அந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை, அந்த சட்டம் பற்றிய தகவல்கூட அவ்வழக்கை நடத்தும் போலீசுக்கு தெரியவில்லை.


விரைவு நீதிமன்றங்கள் அமைக்கலாம். உத்திரப்பிரதேசத்தில் பதினான்காண்டுகளுக்கும் மேலாக ஒரு பாலியல் வன்புணர்ச்சி வழக்கு “விரைவு நீதிமன்றத்தில்” நடந்துகொண்டிருக்கிறது. பெண்களைக் கொண்டே பெண்கள் குற்றங்களை அனுகலாம். ஒரு பெண் முதல்வராக இருந்த போதுதான் வாச்சாத்தி முதல் இருளர் பெண்கள் வன்கொடுமை வரை தமிழகத்தில் நடந்தது. பணத்துக்காக பெண்கள் இந்த குற்றச்சாட்டை வைக்கிறார்கள் என ஒரு பெண் முதல்வர்தான் சொன்னார். ஆகவே இப்போது நடக்கும் போராட்டங்களில் வைக்கப்படும் எல்லா கோரிக்கைகளும் மேற்சொன்ன ஏதோ ஒரு புள்ளியில் முட்டிக்கொண்டு நின்று போகும்.
பண்பாடு கலாச்சாரம் ஆகியவை பெண்களது நடவடிக்கைகளால் கெடுகிறது என நீங்கள் நினைத்தாலும், பெண்கள் அடக்கமாக இருந்தால் பாதுகாப்பாக இருக்கலாம் என நீங்கள் கருதினாலும், புகை பிடிக்கும் பெண்களைக் கண்டு கலிமுற்றிவிட்டது என நீங்கள் புலம்பினாலும், இரண்டு பாலினங்களுக்கும் இரண்டு விதமான ஒழுக்க மதிப்பீடுகளை நீங்கள் வைத்திருந்தாலும், இந்த பொண்ணுங்களே இப்படிதான் என உசுப்பேற்றும் வகையிலான சினிமா வசனத்தை நீங்கள் நெருடலின்றி ரசித்திருந்தாலும் பெண்களுக்கு எதிரான வன்முறையை வெளியிலிருந்து ஆதரிப்பதாகவே பொருள்.


பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நம் ஒட்டுமொத்த சமூகத்தின் பங்கை அந்த ஆறுபேரின் மரணத்தின் மூலமும் ஒரு மெழுகுவர்த்தி மூலமும் .கழுவிவிட முடியும் என நினைப்பது முட்டாள்தனம். நியாயமான காவல்துறையும் நீதித்துறையும் இருந்தால் பாலியல் வன்முறையில் ஈடுபடும் எல்லா குற்றவாளிகளையும் தண்டித்துவிடமுடியும். எனக்குள்ள எல்லா உரிமைகளையும் கொண்டிருக்கிற சக ஜீவன் என பெண்களைக் கருதுகிற ஆண்கள் உருவாகிறவரை அந்த வன்முறைகளை தடுக்க முடியாது.


கல்லெறியும் உரிமை எல்லோருக்கும் உண்டு… யோக்கியனான பிறகு அதை செய்யுங்கள் என்பதுதான் என் கோரிக்கை

Thanks: Senkodi