Friday, May 4, 2012

சிறுகதை: மூதூர் மொகமட் ராபி






நண்பனே...!
எனது உயிர் நண்பனே...!













னக்கு நீண்டகால நண்பன் ஒருவன் இருந்தான்.

ஒரு நிமிஷம் இருங்கள்! 'இருந்தான்' என்றா சொன்னேன்? அப்படிச் கூறினால் அவன் இப்போது எனக்கு நண்பன் இல்லை என்றாகி விடும் என்பதால் உங்களின் அனுமதியுடன் அதிலேயுள்ள 'ந்தான்' என்ற விகுதியை மாற்றி விடுகின்றேன். இருக்கின்றான்!


அவன் ஓர் பாடசாலை ஆசிரியன்.  பெரிய புத்திசாலியெல்லாம் ஒன்றும் கிடையாது. ஆனால் யாரைப் பார்த்தாலும் சுவாரசியமாகப் பேசக்கூடியவன். அதுமட்டுமல்ல இடம், பொருள், ஏவல் அறிந்து நடந்து கொள்ளுவதிலே பெரிய சாமர்த்தியசாலி அவன்.  ஆங்கில மொழியறிவும் ஏறக்குறைய ஒரு கனவான் போன்ற தோற்றமும்  இருப்பதால் கேட்கவும் வேண்டுமா.. எதையும் யாரிடமும் சாதித்துக் கொள்ளக் கூடியவனாக இருந்தான் - அழகான வயசுப் பெண்கள் உட்பட. அவன் எதைச் செய்தாலும் அதற்கு உள்ளுர ஏதாவது காரணம் இல்லாமலிருக்காது.


அவனிடமுள்ள படுசுவாரசியமான விடயம், எப்படியான தகிடுதத்தங்கள் சுழியோட்டங்களிலே ஈடுபட்டாலும் வேளை தவறாது இறைவணக்கத்தில் ஈடுபட்டுவிடுவான் என்பதுதான் . அந்த வழக்கத்தை மட்டும் அவன் என்றைக்கும் கைவிட்டதில்லை. நான் கூட, 'செய்வதையெல்லாம் செய்துவிட்டு தொழுது தப்பிவிடலாம் என்ட நப்பாசையாடா உனக்கு..? நம்மையெல்லாம் படைச்சவன் என்ன அவ்வளவு ஏமாந்தவனாடா?' என்று அவனை வேடிக்கையாகக் கலாய்ப்பதுண்டு. தான் தொழுவது மட்டுமல்லாது 'ஒழுங்காகத் தொழுகிறாயாடா நீ?' என்று தொடங்கி எனக்கும் மற்றவர்களுக்கும் சேர்த்து அவ்வப்போது 'மினி பயான்' (சிறு ஆன்மீகச் சொற்பொழிவு) வைப்பான், அவன்.


எனக்கும் அவனுக்குமிடையிலே உயரம் மற்றும் நிறம் அடங்கலாக தோற்றத்தில் மட்டுமல்லாது மனோபாவங்களிலும் நிறைய வேறுபாடுகள் இருந்தன.  எதையுமே நேர்வழியில் மட்டுமே சிந்திக்கவும் அணுகவும் விரும்புபவனாகிய  எனக்கு அவனது சாமர்த்தியப்போக்கு வியப்பையும் ஒருவித ஆர்வமதிப்பையும் ஏற்படுத்துவதுண்டு. அவனைப்போல சாமர்த்தியமாக நடந்து கொள்ள மட்டும் எனக்குத் தெரிந்திருந்தால் இன்று இருப்பதை விடவும் வசதியான பத்திரமானதொரு வாழ்வை நான் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடும். ஆனால் அது நிச்சயம்  எனக்குப் பிடித்தமான வாழ்வாக இருந்திருக்காது என்பதெல்லாம் வேறுவிடயம்.


எங்களுக்கிடையே இத்தனை வேறுபாடுகள் இருந்தபோதிலும் இருவரும் வெகுகாலமாக நல்ல நண்பர்களாகத்தான் இருந்து வந்தோம்.. மன்னிக்கவும்.. இருக்கின்றோம். அதற்குரிய  காரணங்களில் ஒன்று நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்ள முடியாதளவு தூரத்தில் வசிப்பது. எங்களது மனோபாவ வேறுபாடுகளை மோதவிடாமல் கவனமாகத் தவிர்த்துக் கொள்வது மற்றையது.


ஆனால்  இப்போது நான் சொல்லப்போகும் விடயம் எங்களுக்கிடையே இருக்கும் அந்த எழுதாத சட்டம் பற்றியல்ல. மாறாக, அத்தனை கவனமாக இருந்தும் கூட நாங்கள் இருவரும் மோத வேண்டிய சூழ்நிலை எப்படி உருவானது என்பதைச் சொல்வதற்காகத்தான் இதை எழுதிக்கொண்டிருக்கின்றேன்.


அதை நீங்கள் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு முன்பு நானும் இப்போது ஒரு ஆசிரியராகி ஒரு பாடசாலையிலே கற்பித்துக் கொண்டிருப்பது...    அதே பாடசாலையில் சில காலத்துக்கு முன்னர் அதிபராகக் கடமையேற்ற ஒரு ஊழல் மோசடிப் பேர்வழியின் அட்டகாசங்கள்...   அவரின் நேர்மை தவறிய நடவடிக்கைகளால் எனது சமூகத்தைச் சேர்ந்த ஏழைக்குடும்பங்களின் கல்வியில் ஏற்பட்டுவந்த பாதிப்புக்கள்...எல்லாவற்றையும் விலாவரியாகச் சொல்லியாக வேண்டும்.


ஆனால் அதையெல்லாம் ஒன்றும் விடாமல் நான் விபரிக்கப்போனால் நீங்கள் ஒன்றிரண்டு கொட்டாவிகளுக்குப் பிறகு இந்தக்கதையை மூடிவைத்து விட்டு STAR TV யில் ஐபிஎல் கிரிக்கட் மறுஒளிபரப்புகளைப்  பார்க்கப் போய்விடுவீர்கள்...என்பதால் விட்டுவிடுகின்றேன். (பிழைத்துப் போங்கள்!)


***








ழல்பேர்வழியின் அட்டூழியங்களுக்கு எதிரான மும்முரமான போராட்டத்தின் உச்சத்தில் நானிருந்த நேரம் அது. 
அதே காலப்பகுதியில்தான் எங்களது உள்ளுர் அரசியல்வாதி ஒருவரின் அந்தரங்கச் செயலாளராக அந்த நெடுநாள் நண்பன்  நியமிக்கப்பட்டான். அந்த விடயம்கூட ஒருநாள் வீட்டுக்குப் போவதற்காக நான் பிரதான வீதியைக்கடந்து கொண்டிருந்தபோது என்னைக் கண்டுவிட்டு காரை நிறுத்தி அவன்  பேசியதால்தான் தெரிய வந்தது.


பின்பு ஒருநாள் எங்கள் பாடசாலையின் வருடாந்த கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு பொலீஸ் காவலுடன் அவனது  அரசியல்வாதி சகிதம் வந்திருந்தான்.


178 சென்ரிமீற்றர் உயரத்தில், ஆகாய வெளிர்நீலநிற சேர்ட், ரத்தச்சிவப்புநிற டை,  கறுப்புக்கோட் குளிர்க்கண்ணாடியுடன் அழகான கறுப்புநிறத்தில் பளபளக்கும் ஹையுண்டாய் காரில் ஸ்மார்ட்டாக வந்து இறங்கிய அவன்மீது  உண்மையான நேசமுள்ள எனக்கே லேசான பொறாமை வந்துவிடுமோ என்று பயந்திருக்கின்றேன். அவனது தோற்றத்துக்கும் குணாம்சங்களுக்கும் அந்தப்பதவி வெகு கச்சிதமாய் இருந்தது.


 அங்கும் கூட என்னிடம், ' டேய்! மச்சான், தவறாமல் அஞ்சுநேரமும் தொழுகிறாயாடா...?' என்றுதான் கேட்டான். 'சரி இறைபக்தியில் பற்றி  இவ்வளவு அக்கறைப்படுபவன் நிச்சயம் நமது சமூகத்தின் பிரச்சினையிலும் அக்கறை காண்பிப்பான்' என்று நம்பி எனது அதிபரின் துவேசம், ஊழல் மோசடி நடவடிக்கைககள், அவருக்கெதிரான எங்களது போராட்டங்கள்  பற்றியெல்லாம் அவன் காதிலே போட்டு வைத்தேன்.  அவரால் சுற்றயல் பிரதேசத்தில் இருக்கும் எங்கள் சமூகம் எவ்வளவு மோசமாகப் பாதிப்புக்குள்ளாகின்றது என்பதையும் விளக்கமாக விபரித்து அந்த ஊழல்பேர்வழியை இந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கு செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியல் ரீதியாக உதவுமாறு அவனிடம் கேட்டிருந்தேன்.


ஆனால் அதுதான் நான் செய்த மிகப்பெரும் தவறு!


அதைவிட தனிப்பட்ட வகையில் எனக்கு ஏதாவது பாரிய உதவி ஒன்றைக் கேட்டிருந்தால் கூட எங்கள் இருவருக்குமிடையில் எந்த மனஸ்தாபமும் இன்றுவரை வந்திருந்திருக்காது என்பது இப்போதுதான் தோன்றுகின்றது எனக்கு.


அரசியல்வாதிகளின் இருப்பே அவர்களை நம்பி வாக்களிக்கும் நமது அப்பாவிப் பொதுமக்களின் முட்டாள்தனத்திலும் மறதியிலும்தான் உள்ளது. அரசியலில் இறங்கிவிட்டால் அவர்களே நினைத்தாலும் கூட தாங்கள் பிடித்திருக்கும் அசிங்கம் பிடித்த வஞ்சகப் புலிவால்களை கைவிட்டு விடமுடியாது. அரசியல் சதுரங்க விளையாட்டில் நேர்மையான மனிதர்கள் என்று யாராவது இருந்தால் அவர்கள் மார்க்கட் மவுசுகுறைந்த தமிழ் சினிமா நடிகைகள் போலத்தான் இருந்தாகவேண்டும். மனசாட்சியில்லாத மிருகங்கள் மட்டுமே ஆயுள்வரை கதாநாயகர்களாக உலாவரும் சர்க்கஸ் கூடாரம்தான் அரசியல்துறை. ஒரு திருடனுக்கு எப்படிப் பார்த்தாலும் மற்றொரு திருடன்தானே உபத்திரவமில்லாதவனாக இருக்க முடியும்.


இதையெல்லாம் எப்படி நேரடியாக என்னிடம் சொல்வது என்று தெரியாமலோ என்னவோ சிறிது காலம் என்னை அவனது அலுவலகத்துக்கும் வீட்டுக்குமாக அலையச் செய்தான் எனது நேசத்துக்குரிய அந்த நீண்டநாள் நண்பன்.


இறந்த மகனை உயிர்ப்பித்துத் தருமாறு கேட்ட தாயிடம், 'சாவு விழாத ஒரு வீட்டிலிருந்து பிடிச்சாம்பல் எடுத்து வா' என்று கேட்டாராமே  புத்த பெருமான். அந்த போதிமரத்து மாதவனைப்போலவே,  'என்னால் செய்ய முடியாது' என்று அவனுக்கே நிச்சயமாகத் தெரிந்த சில ஏற்பாடுகளைக் குறிப்பிட்டு  'அதையெல்லாம் செய்து கொண்டுவா ஆளைத் தூக்கிவிடலாம்' என்று என்னை அலைக்கழித்தான் அந்த சாமர்த்தியசாலி.


மரணமே நிகழாத  வீட்டிலிருந்து பிடிச்சாம்பல் கொண்டு வரப்போன  பெண்ணின் நிலைமைதான் அப்போது எனக்கும் இருந்தது.  ஆனாலும் நான் புத்தபெருமானின் துணையில்லாமலே என்னுடைய 'இறந்த குழந்தையை' உயிர்ப்பித்தேன். இன்னமும் சொல்லப்போனால் அந்த புத்தபெருமானின் எஜமானர்களின் மறைமுக இடைஞ்சலையும் மீறித்தான் 'மரித்த குழந்தையை'  உயிரூட்டியெடுத்தேன்.


ஆம்! எனது நோக்கத்திலிருந்த யோக்கியம் தந்த மனோபலத்தினாலும் தளராத விடாமுயற்சியினாலும்  பொதுமக்களின் ஒத்தாசையுடன் எங்கள் குழந்தைகளின் கல்வியை  நாசம் செய்துகொண்டிருந்த  ஊழல்பிசாசை அந்த இடத்திலிருந்து துரத்தியடித்தேன்.



***







ந்த நிகழ்ச்சிப் பிறகு வெகுநாட்களாக நண்பர்கள் நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. சிறிதுகாலம் இருவருக்குமிடையில் கைத்தொலைபேசி குறுஞ்செய்திச்சேவையில் மெல்லிய பனிப்போர் நிகழ்ந்து வந்தது. அதன் பின்பு அதுவும் கூட நின்று போனது.


நீ....ண்ட காலமாய் தொடர்பே கிடையாது.


ஏறத்தாழ அவனை நானும் என்னை அவனும்; மறந்துபோய்விட்டிருந்த நிலையில் இரண்டொரு நாட்களுக்கு முன்பு நகரிலிருக்கும் பிரபலமான மருந்துக்கடையொன்றிலே மருந்தை வாங்கிக்கொண்டு திரும்பியபோது எனக்குப் பின்னால் நின்றிருந்தான் அவன்.

'மச்சான் நீயாடா? அஸ்ஸலாமு அலைக்கும்!' 

அந்த வெளிர்நீலநிற சேர்ட்..சிவப்பு டை..கறுப்புக்கோட்..கார்..எதையுமே காணவில்லை. சாயம்போன டீ சேர்ட் ஜீன்ஸில் முகவாயில் லேசாய் நரைத்த மூன்றுநாள் ஷேவ் செய்யப்படாத தாடியுடன் 'அவனா நீ' என்பது போல நின்றிருந்தான்.

' அலைக்கும் ஸலாம்! என்னடா எப்படியிருக்கிறாய்..? இப்ப உன்னைத் திரும்பவும் ஸ்கூலுக்கு ரிலீஸ் பண்ணிட்டாங்களா?'

' ம்ம்! தட் ஈஸ் நொட் ரிலீஸ் மச்சான்இ இட்ஸ் ரியலி எ பிக் ரிலீப்ஃடா!' என்றான் தோள்களைக் குலுக்கிக் கொண்டு.. அதன்பிறகு தெருவோரமாக நின்று வெகுநேரம் அளவளாவிக் கொண்டிருந்தோம்.
'கொஞ்சம் இருடா, ஒருநிமிஷம் நானும் மருந்தை வாங்கிட்டு..' என்று மீண்டும் பாமசிக்குள்ளே நுழைந்தவனை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.


இத்தனை நடந்தும் அவன் மீது எனக்குத் துளியளவு கூட வருத்தமில்லை என்றால் நம்புவீர்களா நீங்கள்?


ஆம்! அவன்மீது பரிதாபம்தான் ஏற்பட்டது. அதுகூட, அவனது காரையும் வசதிகளையும் பறித்துக்கொண்டு மீண்டும் 20ம் திகதியைக் காத்திருக்கும் சாதாரண ஒரு ஆசிரியர் வாழ்க்கைக்குள்ளே தள்ளிவிட்டார்களே என்பதனால் அல்ல...! அவன் சாமர்த்தியத்துக்கு ஒரு பீ. எம். டபிள்யூ காரோடு நாளைக்கே நடுவீதியில் என்னை மறித்து, 'மச்சான் இப்ப நான்........' என்று வேறு ஒரு புதிய தகவலை அவன் சொல்லக்கூடும்.


ஆனால், எனது கவலையெல்லாம்..


 'எப்போது பார்த்தாலும் என்னைப் போன்ற நண்பர்களுக்கு தொழுகையை வலியுறுத்தும் அந்த பிராண்டட் 'மார்க்கபக்தி' நண்பனுக்கு அந்த எல்லாம் வல்ல அல்லாஹ் சுபஹானஹுதாலா, அன்றாடம் கூலிவேலை செய்து விறகுவெட்டி, இறைவனைப் பயந்து ஐந்துவேளை தொழுது  களவு-பொய்யின்றி நேர்மையாக வாழும் ஏழைப் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு  உதவும் பாக்கியத்தை   ஏன் இல்லாமல் செய்தான்...?'  என்பதுதான்!


மருந்துகளோடு அவன் திரும்பி வந்ததும், 'மச்சான்,  நான் கொஞ்சம் அவசரமா போக வேணும்டா..நீ வேலைய முடிச்சிட்டு போகிற வழியில வீட்டுக்கு வந்திட்டுப் போ!' என்று புறப்பட ஆயத்தமானேன்.


'சரிடா, வரப்பாக்கிறேன்..நீ போயிட்டு வா!'  என்று விடை தந்தவன் சற்று யோசித்து விட்டு என்னை மீண்டும் அழைத்து,


' அதுசரி, தொழுகையெல்லாம் ஒழுங்காகச் செய்யுறியா?' என்று கேட்டான்.




 Thanks: Kinniya net
-மூதூர் மொகமட் ராபி

கவிதை:





பூவிழியே!













பூவிழி

மெல்லத் திறவாமலே

புதைந்துபோன

என் புன்னகைப் புதையலே...



புனைந்துநான் முடிப்பதற்குள்ளே

தொலைந்துபோன

புத்தம் புதுக்கவிதையே!



வரைந்த வண்ணம்

வரைந்தவண்ணம் உலரும் முன்னே

மறைந்துபோன

என் மௌன ஓவியமே..!



உன் தந்தை முகம் பாராமல்

தாயின் பாலும் அறியாமல்

என் அனிச்சம்பூவே

அப்படியென்னடி அவசரம் உனக்கு..?



இரத்த உறவுகளும்

இரக்கமில்லாச் சதிபுரியும்

ஈன மனிதர்களைப்

பார்த்திடப் பயந்துதானோ

உன் இருவிழிகளை நீயும்

இறுக மூடிவிட்டாய்...?



பாசத்தைக்கூடப்

பணத்தால் கணித்திடும்

இந்தப்பாசாங்கு பூமியிலே

உன்பாதங்கள் படவிரும்பா

அவசரத்தினாலா

பதறியடித்து நீ ஒடி மறைந்தாய்...?




ஓ! இறைவனே!

இவ்வுலகில் நீயொருவன்

உண்மையிலே இருந்தாயென்றால்

ஒன்று செய்!



விழிதிறவா மழலையெல்லாம்

விண்வெளியில் தாரகையாய்

உருமாறி உயிர்த்திருக்கும்

என்பாலர் பருவத்துப் பள்ளிக் கதைகளை

உண்மையாய் ஆக்கிவிடு!



ஒவ்வொரு இரவிலும்

ஒயாமல் விழித்திருக்கும்

என் ஒளிமகளை நான் காணும்

சிறுதயவையேனும் புரிந்துவிடு!






-மூதூர் மொகமட் ராபி

இது என்ன நியாயம்?







கம்பன் பேரில் கலகம் வேண்டாம்!







ருடாவருடம் தலைநகரில் நடைபெறும் மனநிறைவைத்தரும் வைபவங்களுள் அகில இலங்கை கம்பன் கழக விழா முதன்மை வாய்ந்தது. தமிழ்பேசும் மக்கள் என்ற கோசத்தோடு உள்நாட்டு இந்து, முஸ்லிம் கிறிஸ்தவ தமிழ் இலக்கியகர்த்தாக்கள் இலக்கிய சுவைஞர்கள் உட்பட வெளிநாட்டு தமிழறிஞர்களையும் ஒன்றிணைக்கும் சமத்துவ இலக்கிய சங்கமமாக விளங்குவது கம்பன்கழக விழா. இவ்வாறு ஒற்றுமையின் சின்னமாக திகழும் கம்பன் கழகம் இன்று ஊடகங்களில் பேசுபொருளாகமாறியிருப்பது நமது கவனத்தை ஈர்ப்பதாகிறது.


இவ்வருட கம்பன் கழக தொடக்கவிழாவில் ஜனாப். ரஊப்ஹக்கிம் உரையாற்றக் கூடாது.  அவர் புலம்பெயர் தமிழர் குழுக்களின் முயற்சியின் பேறாய் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கெதிரான பிரேரணையை தோற்கடிக்கமுயற்சித்தார். இது தமிழ்மக்களுக்கு எதிராகச் செயற்பட்டாகிறதால், ஆதலால் அவர் அ.இ.கம்பன்.கழகத்தில் தொடக்கவுரையாற்றக் கூடாது என தமிழ்ப்படைப்பாளிகள் சங்கம் தெரிவித்துள்ளதாக தமிழ்வின் என்ற இணையதளம் செய்தி வெளியி;ட்டுள்ளது.


தொடக்கவுரையாற்ற ஹக்கீம் தக்கவர்தாமா என்பதை கம்பவாரிதியவர்களும் நிகழ்வுக்குழுவும் நன்குபரிசீலித்ததன் பின்பே  தீர்மானித்திருக்க, தமிழ்படைப்பாளிகள் சங்கமானது அத்தீர்மானம் தமிழ்மக்களுக்கு எதிராகக்கொண்டுவரப்பட்ட தீர்மானம்; எனக்கருதி ஜனாப். ஹக்கீம் உரையாற்றுவதை எதிர்க்கிறது.


தொடக்கவுரையாற்ற ஹக்கீம் தெரிவு செய்யப்பட்டதற்குப் பின்னணியில் பெரும் மர்மங்களோ நோக்கங்களோ இருந்திருக்கும் என்றெல்லாம் கருதத் தேவையில்லை. ஹக்கீம் ஒரு தமிழறிந்த சிறந்த பேச்சாளர். அவ்வளவுதான் அத்தகுதிபோதும் தொடக்கவுரையாற்றுவதற்கு என கம்பன்குழு தீர்மானித்திருக்கும். அதற்கும் அப்பால் அவர் ஒரு அரசியல்வாதி என்ற வகையில் அரசியல் சொல்லாடற்பாங்கில் சொல்வதானால் அவரும் ஒரு தமிழ்பேசும் மகன் என்பதனால் அவர் தெரிவுசெய்யப்பட்டிருக்கலாம். இதில் ஏனைய காரணங்களை விட இக்காரணமே சாலப்பொருந்தும் எனக்கருதலாம்.


'கம்பனைப் போற்றுவதானது தமிழைப்போற்றுவதாகும்'. என்பதில் இருகருத்துக்களில்லை. இவ்வாறிருக்க தமிழ்படைப்பாளிகள் சங்கம் ஜனாப்.  ஹக்கிம் தமிழருக்கு எதிராகச்செயற்பட்டாராதலால் அவர் கம்பன் கழகத்தில் உரையாற்றலாகாது என்பதினூடாக தமிழ்மொழி தமிழருக்கு மாத்திரம் உரித்துடையமொழி என கூறி தமிழ்மொழிக்கு ஒரு இனம் சார்நிலைப்பட்ட முகத்தோற்றத்தை கொடுக்க முற்படுவது வெளிப்படையாகத்தெரிகிறது.


அதாவது பல்வேறு பிரதேசத்தவரும் பல்வேறு இனத்தவரும் பேசவும் பற்றுக் கொள்ளவும் வளர்க்கவும் பன்முகங்கொண்ட ஒரு செம்மொழிக்கு இனவாதச்சாயம் பூசி அழகுபார்க்க முற்படுவது ஆரோக்கியமானதல்ல என்பதை தமிழின் மீது அறிவுபூர்வமான அன்பு வைத்திருப்போர் அனைவரும் ஏற்றுக்கொள்வர்;.


அஃதவ்வாறிருக்க அமெரிக்காவின் ஜெனிவாப்பிரேரணையானது தமிழ் மக்களது நலனைக்கொண்டதா அல்லது அமெரிக்காவின் நலனைக் கொண்டதா என்ற வினாவை எழுப்பினால் அதன் விடை என்னவாகும் என்பதும்இ சர்வதேசஇ பிராந்திய அரசியல் போக்கு எதிர்காலங்களில் என்னென்ன தளங்களில் பயணிக்கும் அப்போது இப்பிரேரணை எத்தகைய பெறுமானத்துக்குட்படும் என்பதெல்லாம் உடன் கூறமுடியாத விடயங்கள்.


யதார்த்தம் இவ்வாறிருக்க தமிழைக்கொண்டாடும் ஒரு அரிய இனிய கைங்கரியத்தை அரசிலாக்குவது பரிதாபத்துக்குரியது.

கடல்கடந்து செயற்படும் முன்னாள் போராளிகளின் பல்வேறு முயற்சிகளின்பேறாக பிரேரணை கொண்டு வரப்பட்டதென்றும் அதற்குத்தாமே பெருங்காரணம் என்றும் பல்வேறு புலம்பெயர் முன்னாள் ஆயுதக்குழுக்கள் இன்றுவரை ஊடகங்களுடாக உரிமைப்போராட்டம் நடாத்திக்கொண்டிருப்பது வெளிப்படை.


அந்தவகையில் பார்க்கப்போனால் தமிழ் ஆயுதக்குழுக்களுக்குள் பல்வேறு வேற்றுமைகள் இருப்பினும் அவை முஸ்லிம்கள் மீது தமிழ்த் தேசியவாதத்தை வன்முறைவடிவில் பிரயோகிப்பதில் அவை தமக்குள் வேற்றுமையில் ஒற்றுமை கொண்டிருந்தன என்பது மறுக்க முடியாத மறைக்கமுடியாத உண்மை. அந்தவகையில் பார்க்கப்போனால் தம்மையளிக்க முற்பட்டோரின் நடவடிக்கையினை எதிர்ப்பதில் எந்தப்பிசகும் இல்லை. சிங்களத்தேசியவாதத்தின் எந்வொரு நகர்வினையும் எதிர்ப்பதற்கு உள்ள நியாயம் தான் இதற்குள்ள நியாயமும்.


இந்த நியாயங்கள் ஒருபுறமிருக்க நூற்றாண்டிற்கு முன்பிருந்து  பொன்னம்பலம் இராமனாதன் தொடக்கி வைத்த தமிழ்ப்பேசும் மக்கள் என்ற வகைப்படுத்தல் இன்று வரையில் அது முஸ்லிம்கள் தொடர்பில் மேலாதிக்க நோக்கங்கொண்ட சொல்லாடலாகவே பிரயோகிக்கப்படுகிறது என்பது தெள்ளத் தெளிவான விடயம்.


யதார்த்தம் இவ்வாறிருக்க தமிழ்ப்பேசும் மக்கள் என்ற சொல்லாடலுக்குரித்தான அரசியல் பரிமாணத்துக்கு பதிலாக மொழிசார் பரிமாணத்தை எடுத்துக்கொண்டோமானால் முஸ்லிம்கள் தமிழைப் பேசவும் போற்றவும் வளர்க்கவும் முற்றிலும் அருகதையுடையவர்கள்.


தமிழ் மொழிக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான தொடர்பு இனாமாகவோ பிச்சையாகவோ வழங்;கப்பட்ட ஒன்றல்ல. தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக பல்லாயிரம் இலக்கியங்களைப் படைத்துத்தமிழை அணிசெய்து கொண்டுதான் இன்றும் முஸ்லிம்கள் தம் வீட்டு மொழியாகவும் கற்றல் மொழியாகவும் தமிழைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.


உமறுப்புலவர் சதாவதானி செய்குத்தம்பிப்பாவலர் முதற்கொண்டு,அருள்வாக்கி அப்துல்காதிருப்புலவர்,சொர்ணகவிராயர், மஸ்தான்ஸாஹிப்சித்தர் ஈறாக கவிக்கோ, எம்.ஏ. நுஃமான் வரை பல்லாயிரம் முஸ்லிம்கள் முத்தமிழுக்குமப்பால் நாற்றமிழான அறிவியற்றமிழுடாகவும் தமிழக்கு அரும்பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.



இன்றும் இலங்கையில் தமிழ்மக்கள் எவருமே வசிக்காத எத்தனையோ பிரதேசங்களில் வசிக்கும் முஸ்லிம்கள் அருமைத் தமிழைப்பேசி படித்து எழுதித் தமிழுக்கு அணிசெய்து கொண்டிருக்கின்றனரென எத்தனையோ தமிழறிஞர்கள் வியந்துரைத்துக் கொண்டிருக்கின்றனர்.



தென்னிந்தியாவில் உள்ள பழந்தமிழ் கல்வெட்டுக்களை ஆராய்ந்த புகழ்வாய்ந்த ஆய்வாளர்; ஐராவது மகாதேவனின் ஆய்வு நூல் பற்றிக்குறிப்பிட்ட தமிழறிஞர் கா.சிவத்தம்பி அவர்கள், 'தமிழ்மக்கள்   மத்தியில் இருந்து அருகி விட்டதாகவும் அவை முந்துதமிழ் எனவும் கூறப்படுகின்ற பல பழந்தமிழ்ச்சொற்கள் இன்றும் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் புழக்கத்தில் இருப்பது கவனிப்பிற்குரியதும் ஆய்வுக்குரியதுமாகும்'  எனக்குறிப்பிட்டுள்ளார். அந்தவகையில் தமிழுக்கும் முஸ்லிம்களுக்கும் பன்னெடுங்கால நீண்டநெடிய தொடர்புகளிருக்கின்றன. இத்தகைய ஒரு உறவை தமிழ்படைப்பாளிகள் சங்கம் என்று கூறப்படுகின்ற ஒரு சங்கம் குறுகிய கண்ணோட்த்தினூடாக பிரித்துப்பார்க்கலாகாது.


எல்லாவற்றுக்குமப்பால் 'கம்பனை பண்டிதர்கள் மத்தியில் எடுத்துச் சென்றோருக்கு மத்தியில் கம்பனை பாமரர்மத்தியில் எடுத்துச்சென்றவர் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி உயர் திரு மு.மு.இஸ்மாயில் அவர்கள் என்று எல்லாத்தமிழ் அறிஞர்களும் ஒருமிக்கப் பாராட்டுவர். அந்தளவுக்கு நீதிபதி. மு.மு.இஸ்மாயில் அவர்கள்  கம்பராமாயண விருத்தப்பாக்களுக்கு சொல்,பொருள், அணி எனப் பிரித்து பொருளும் பொழிப்பும் சிறப்பும் எழுதிய தமிழ்நடை லட்சக்கணக்கானோரை கம்பனைப் படிக்கத் தூண்டியது.


எவ்வாறாயினும்  இக்காரணங்கள் அனைத்கக்கும் அப்பால் ஜனாப். ரஊப் ஹக்கீம் அவர்கள் ஒரு காத்திரமான கவிப்புலமைப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். ஆகவே அஃதொன்று மட்டுமே போதும் அவர் கம்பன் விழாவில் தொடக்கவுரையாற்ற.



மொழியை...இணைக்கும் வழியாகவே பார்ப்போம் - யாரும்
     பிரித்துப் பலியாக்க வேண்டாம்.




-மூதூர் முகம்மதலி ஜின்னாஹ்
 Thanks : Thenee

Monday, April 30, 2012

குட்டிக்கவிதை:





விழிகளிலே
ஒரு விமானத்தளம்!






அன்பே!


இத்தனை
உணர்ச்சி விமானங்கள்
இலாவகமாய் -
இறங்கிச் செல்கின்றனவே...
விழிவிளக்குகள் வழிகாட்டும்
உன் சந்திரவதனமென்ன
ஒரு சர்வதேச விமானத்தளமா...?



-மூதூர் மொகமட் ராபி